ஏழைகளின் தோழன் அசிசி.
ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் திங்கள் 4-ம் தேதி கத்தோலிக்கத்
திருச்சபையானது ஒரு முக்கியமான புனிதரின் திருநாளை கொண்டாட அழைப்பு விடுக்கிறது.
கி. பி. 1182 ம் ஆண்டு இத்தாலி நாட்டில் உள்ள ஒரு செல்வந்த குடும்பத்தில் பிறந்து,
வளர்ந்து பின்னர் இயேசுவுக்காக அனைத்தையும் துறந்துவிட்டு, எளிமை வாழ்வினை பூண்டு,
திருச்சபை வரலாற்றில் ஒரு பெரிய திருப்பத்தை ஏற்படுத்திய ஒரு மாபெரும் புனிதர் புனித பிரான்சிஸ் அசிசியார்.
புனிதரின் திருநாளைச் சிறப்பிக்கும் இந்நன்னாளில் அவரது வாழ்வு நமக்கு ஒரு மிக முக்கியமான வாழ்க்கைப் பாடத்தைக் கற்பிக்கிறது என்பதில் ஐயமில்லை.
செல்வாக்கு மிகுந்த ஒரு வணிகரான தன் தந்தையின் செல்வச்செழிப்பில்
தனது இளமைப் பருவத்தை செலவிட்ட அவர், 1204-ல் ஆண்டவர் இயேசுவால் ஆட்கொள்ளப்பட்டு
உலக வாழ்வினை வெறுத்து தனக்குச் சொந்தமான தன் தந்தையின் செல்வம்
அனைத்தையும் வேண்டாம் என உதறித்தள்ளிவிட்டு ஏழைகளின் தோழனாய் எளிமை வாழ்வு பூண்டார்.
தன்னை ஆட்கொண்ட இயேசுவுக்காக எல்லாவற்றையும் இழந்து
எல்லாவற்றிலும் இறைவனைக் கண்டு பாவித்து எளிமையினை மையப்படுத்திய ஓர் இனிமையான
ஆன்மீத்தை அனைவருக்கும் தனது வாழ்வினால் வழங்கினார்.
1209- ல் பிரான்சிஸ்கன் துறவற சபையினைத் துவங்கி அதன் மூலம் எளிமை வாழ்வினை வாழ்ந்து
ஏழைகளின் தோழர்களாய் இயேசுவைப் போதிக்க அழைப்பு விடுத்தார்.
தனது 42ம் வயதில் ஆண்டவர் இயேசுவின் ஐந்து திருக்காயங்கள் அவருக்கு வழங்கப்பட்டு
அதிக வேதனைகளை அனுபவித்து தனது 44ம் வயதில் 1226ம் ஆண்டு உயிர் நீத்தார்.
இவர் மறைந்தாலும் இத்தனை ஆண்டுகள் கடந்தும் இவரின் வாழ்வும், உயரிய ஆன்மீகமும்
இன்றும் பலரையும் கவர்ந்திழுக்கின்றது. ஏழை எளியோரிலும், வாடிடும் வறியோரிலும்,
பறவைகள் விலங்குகளிலும் பரமனைக் கண்டு தரிசித்து இயற்கையோடு இணைந்த வாழ்வு வாழ்ந்த
இப்புனிதரின் வாழ்வு இந்த நவீன உலகில் இயற்கையை மதிக்க மறுக்கும் மானுடத்தை மாற்றிட வேண்டும்.
பணத்திலும், பகட்டிலும் கவனம் செலுத்தும் மனிதர்கள் அனைவரும் பணிவிலும், பரிவிலும்
கவனம் செலுத்தி பண்பான வாழ்வு வாழ்ந்திட புனிதரின் வாழ்வு வித்திடட்டும்.
ஏழைகளின் தோழன் புனித அசிசியை பின்பற்றி ஏழைகளின் தோழனாய்
எழுச்சிமிகு வார்த்தைகளாலன்றி எளிமையான வாழ்வால் கிறிஸ்துவை அறிவித்துக் கொண்டிருக்கும்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தலைமையிலே ஏழைகளிலும், இயற்கையிலும்
இறைவனைக் கண்டு பணிவிலும் பரிவிலும் நிலைத்து ஏழைகளின் தோழர்களாய் வாழ
முற்படும் போதுதான் நாம் கொண்டாடும் இத்திருநாள் அர்த்தம் பெறும் நமது விசுவாசமும் ஆழம் பெரும்.