நான் வசிக்கும் விளாங்குடி கிராமத்திலிருந்து திருவையாறு என்ற இடம் நோக்கி பொருட்கள் வாங்குவதற்காக அடிக்கடி செல்ல வேண்டியிருக்கும். ஒவ்வொரு முறையும் அந்த இடம் நோக்கிச் செல்லும் போது ஒரு மூதாட்டி தலையில் எதையோ பாரமாக சுமந்து வருவதைக் காண்பது வழக்கம். "யார் இவர்? ஏன் இந்த வயதான காலத்தில் எதையோ கஷ்டப்பட்டு சுமந்து வருகிறாள்?" என எனக்குள் பல முறை கேட்டிருந்தும் அவரிடம் கேட்க பல நாட்களாக எனக்குத் துணிவு வரவில்லை. ஒரு சில தினங்களுக்கு முன்பாக இரு சக்கர வாகனத்தில் திருவையாறு நோக்கிச் செல்லும் போது அதே காட்சி. அந்த மூதாட்டி தலையில் அதே கூடையில் எதையோ கஷ்டப்பட்டு சுமந்து வந்தார். எப்படியாவது இன்று கேட்டுவிட வேண்டும் என எண்ணி, எனது வாகனத்தை நிறுத்திவிட்டு அவரை வழி மறித்து துணிச்சலோடு கேட்டேன், "பாட்டி, யார் நீங்க? எங்கிருந்து வர்றீங்க? உங்களை நான் தினமும் பார்க்கிறேனே" என்று கேட்க, படிக்காத பாமரருக்கு உரிய அதே பாணியிலே அவர் சொல்ல ஆரம்பித்தார்.
"ஏன் பேரு பாப்பம்மா. என்னோட ஊரு திருவெங்கனூர். திருமானூருக்குப் பக்கத்தில இருக்கு. நான்..." என்று இழுத்தவாரே,"ஆமா, நீ யாரு தம்பி? இதெல்லாம் நீ ஏன் கேட்கிறே?" என்றார்.
"பாட்டி உங்களை நான் தினமும் பார்ப்பேன். நீங்களும் இந்த சுமையை சுமந்துக்கிட்டு ஆடி, ஆடி நடந்து போவிங்க. எனக்கு உங்ககிட்ட பேசனும்னு தோணுச்சு. அது தான் பாட்டி கேட்டேன். தப்பா எதுவும் கேட்டிருந்தா மன்னிச்சுக்கங்க பாட்டி" என்று சொன்ன அடுத்த தருணமே, "நீ என்னத்த தப்பா கேட்டாய்? ஒரு நாளும் என்னட்ட யாரும் பேசுனது கிடையாது. ஆனா நீ பேசுனீயே, அதுவே பொ¢ய விஷயம் தம்பி" என்று சொன்ன அந்த பாட்டியிடம் "நீங்க தலையில தினமும் எதையோ சொமந்துகிட்டு வர்றீங்களே. அது என்ன பாட்டி" என்று கேட்க "இது தயிரு தம்பி. ஒரு ஒம்போது வருசமா எங்க ஊருல இருந்து திருவையாறுக்கு நடந்தே இதை சுமந்துகிட்டு வர்றேன். பஸ்ல என்னைய ஏத்த மாட்டாங்க! அதுனால நான் நடந்தே வருவேன். ஒரு நாளைக்கு இருநூறு ரூபாய் கிடைக்கும். அதை வச்சுத்தான் வாழ்க்கை ஓடுது.”
“எனக்கு இப்ப 75 வயசு ஆகுது. இருந்தாலும் இதை சுமந்துக்கிட்டு போயி வித்தாத்தான் ஏன் வீட்டில ரெண்டு பிள்ளைகளுக்கு சோறு. அதுனால நான் சுமந்து போயி ஒவ்வொரு நாளும் விக்கிறேன்."
"75 வயசில இப்படி தலையில சுமையோட ரெண்டு உயிரக் காப்பாத்த, தயிர வித்து கஷ்டப்படுறீங்களே, ஏன் பாட்டி?" என்று கேட்ட அடுத்த தருணம் அவர் பேசவில்லை, அவரின் கண்களில் வடிந்த கண்ணீர் பேசியது. கண்ணீரைத் துடைத்தவாரே, "ரெண்டும் என்னோட பேரப்பிள்ளைங்கப்பா. ரெண்டு குழந்தைகளையும் விட்டுட்டு என் மகள் செத்துப்போயிட்டா. இப்ப நான் தான் இந்த ரெண்டு உயிருக்கும் தயிரு வித்து சோறு போடுறேன்." "ஒம்போது வருசமா, இப்படி கஷ்டப்பட்றீங்களே இது சுமையா தொ¢யலையா?" என்று நான் கேட்க, "எவ்வளவு சுமையா இருந்தாலும், தயிரு வித்துட்டு வீட்டுக்குப் போகும் போது அந்த ரெண்டு உயிர்களும் ஒன்னா 'பாட்டினு' ஓடி வந்து கட்டி அணைக்கும் போது என்னோட "சுமையெல்லாம் சுகமா மாறிடும் தம்பி" என்று அவர் சொன்ன போது என்னையே மறந்து அவரின் சுமை தாங்கிய முகத்தை நோக்க அங்கே மலர்ந்த பரிசுத்த புன்னகை, "எத்தனை சுமைகளாய் இருந்தாலும், விரும்பி சுமந்தால் எல்லா சுமைகளும் சுகங்களே" என்ற வாழ்வின் பாடத்தை எனக்கு உணர்த்தியது.
பிறரின் சுமையை விரும்பி சுமக்கும், ஒரு உண்மையான மனிதத்தைக் கண்டு எனக்குள் சொல்லிக்கொண்டேன், "இதுவன்றோ மனிதம்!" என்று. நாம் வாழும் உலகிலே பிறருக்கு சுமை மேல் சுமையினை ஏற்றி அதிலே சுகம் காணும் மனிதர்கள் மத்தியிலே பிறரின் சுமையினை விரும்பி சுமந்து அதிலே சுகம் காணும் அந்த பாட்டி போன்ற படிக்காத ஆனால் பண்பான மனிதர்கள் ஏராளம்.
மற்றவர்களை வாழ்வில் உயர்த்திட, தங்களால் இயன்ற அளவோ அதனினும் மேலோ பிறரின் வளர்ச்சிக்காய் சுமை சுமந்து சோர்ந்து போய் அந்த சோர்வான சுமையிலே சுகம் காணும் மனிதர்களை இனம் கண்டு அத்தகைய உயா¢ய குணத்தை நமதாக்க ஆசிக்க வேண்டும். "சுமைகளும் சுகங்களே" என்பதை வாழ்வினில் உணர்ந்து நம் வாழ்வினில் சுமைகளை ஏற்று இஷ்டப்பட்டு கஷ்டப்படும்போது வாழ்வு சுகமாய் மாறும் என்பதில் ஐயம் இல்லை. அவ்வாறு பிறரின் சுமையினை சுமந்து அதிலே சுகம் காணும் அந்நொடியே அனைவரும் ஒருமித்து சொல்லலாம் "பிறரின் சுமையினை விரும்பி சுமக்கும் இதுவன்றோ மனிதம்!" என்று.