"சீச்சீ" என்று தமிழ்நாட்டின் பல கிராமங்களிலும், நகரங்களிலும் பல இடங்களில் விளம்பர பலகைகளை நிச்சயம் பலரும் பார்த்திருப்போம். அதைப் பார்த்த ஒரு சிலர் ‘என்ன இந்த விளம்பரம்’ என வியந்திருக்கலாம். ஒரு சிலர் ஒன்றுமே புரியாமல் குளம்பி போயிருக்கலாம். மற்றும் சிலர் பார்த்தும் பார்க்காதது போல "எனக்கு என்ன தேவை வந்திருச்சு?" என எப்பொழுதும் போல சென்றிருக்கலாம்.
ஆனால் அது என்ன என அறிந்து கொள்ள முயற்சித்து பிறருக்கு அதைப் பற்றி விளக்கிக் கூற விழைந்தவர்கள் மிகவும் சொற்பமே. அது என்ன விளம்பரம் என அறிந்து கொள்ள எனக்கும் ஆசை அதிகம் இருந்தது. ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கிவிட்டு என்னை சிந்திக்கத் தூண்டிய அந்த விளம்பரத்தின் பொருள் அறிய ஒரு சில நாட்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. காத்திருப்பதிலும் தனி சுகம் உண்டு அன்றோ! ஒரு சில நாட்கள் காத்திருந்து அதே இடத்தில் பொ¢ய விளம்பர பலகையைக் கண்டேன். கண்ட செய்தி என்னை உண்மையில் "சீச்சீ" என்று சொல்ல வைத்தது.
"திறந்த வெளியில் மலம் கழித்தால் 'சீச்சீ' சொல்லப்பா". "சீச்சீ" கழிவறை இல்லாத வீட்டில் கல்யாண சம்பந்தம் பேசலாமா". "சீச்சீ" எருமை சாணி போடுறது மாதிரி, மனுசங்க திறந்த வெளியில் மலம் கழிக்கலாமா?" என பல கேள்விக் கணைகளைத் தாங்கியிருந்தது அந்த விளம்பரப் பலகை. பல நாட்கள் காத்திருந்த எனக்கு அந்த விளம்பரம் ஓர் அறிய பாடத்தை புகுத்தியது. ஆம், இந்திய பொருளாதாரத்தின் அதிலும் குறிப்பாக தமிழகத்தின் 'ஏற்றமிகு' தோற்றத்தை அப்பட்டமாய் படம் பிடித்து காட்டிய அந்த விளம்பரம் ஆட்சியாளர்களுக்கு ஒரு சாட்டையடியாகத்தான் இருந்திருக்கும்.
"இந்தியா ஒளிர்கிறது, தமிழகம் மிளிர்கிறது' என்றெல்லாம் வெற்று வேசம் போடும் அரசியல் தலைவர்கள் எப்படி சொல்லப் போகிறார்கள் பதில். மக்களின் ஓட்டுக்களைச் சுரண்டி, பதவியில் அமர்ந்து கொண்டு எதை எதையோ இலவசம் என அறிவிக்கும் நம் அரசியல் தலைவர்கள் இத்தனை ஆண்டுகளாக ஒரு ஏமாற்று அரசியல் அல்லவா நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஏன் இந்த கேள்வி? என இலவச அரசியலை அதிகம் விரும்பும் ஒரு சிலர் கேட்கலாம். இலவசங்களைக் கண்டு நம் உரிமைகளைக் கேட்டு வாங்க மறந்து வாழ்ந்து கொண்டிருக்கும் எத்தனையோ என் உறவுகளுக்கு உண்மை இன்னும் புரியாமலே இருக்கிறது. ஆனால், அது புரியாமலே இருந்து விட்டால் ஒன்றும் புண்ணியம் இல்லை.
இலவசங்களில் வாழ்வுரிமைகளைத் தொலைத்து விட்டு, ஆகாது என்று தெரிந்தும் அரசியல் வாதிகளில் வெற்று நம்பிக்கையை வளர்த்தால் நம் வாழ்வு அர்த்தம் இன்றி போய்விடும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. அரசியலை பணம் சுருட்டும் நல்ல கருவியாக பயன்படுத்தும் அரசியல் வாதிகள் இருக்கும் வரை, நமது அடிப்படை உரிமைகளும் அடிப்படைத் தேவைகளும் எட்டாக்கனியாகத் தான் இருக்கும். 21ம் நூற்றாண்டிலும் அடிப்படை வசதியின்றி அல்லலுறும் இந்தியர்கள் எத்தனை எத்தனை. வளரும் இந்தியாவில், வாடும் இந்தியர்கள் எத்தனை எத்தனை! ஒளிரும் இந்தியாவில், உருகும் இந்தியர்கள் எத்தனை எத்தனை! என்று விளையும் எங்கள் புண்ணிய பூமி என ஏக்கத்தோடு காத்திருக்கும் விவசாயிகள் எத்தனை எத்தனை! பெண்களாய் பிறந்ததாலே பல்வேறு பெண் கொடுமைகளை அனுபவிக்கும் பெண்கள் எத்தனை!
நோபல் பரிசு பெற்ற பெருமகனார் பொருளாதார மேதை அமர்த்தியா சென் அவர்களின் ஆய்வின் படி 600 மில்லியன் இந்தியர்கள் மலம் கழிக்க இடமின்றி திறந்த வெளியில் தினமும் அவதிப் பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
அமர்த்தியா சென் அவர்கள் தான் எழுதிய "An Uncertain Glory " என்ற நூலில், மிக முக்கியமாக எழுப்பும் கேள்வி, "600 மில்லியன் இந்தியர்கள் மலம் கழிக்கச் செல்வது எங்கே?" 'இந்தியா ஒளிர்கிறது' என அறிவிக்கும் அரசியல்வாதிகள் அமர்த்தியா சென் அவர்களின் கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் திகைப்பது அனைவரும் அறிந்ததே. திறந்த வெளியில் மலம் கழிப்பதால் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு அன்றாடம் மக்கள் அவதிப் படுவது அறிந்தும் அறியாமல் இருக்கும் அரசியல்வாதிகள் எப்படி மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வார்கள் என்பது பொ¢ய கேள்விக்குறியே.
திறந்தவெளியில் மலம் கழிப்பதால் பரவும் நீர்வினை நோய்களால் இந்தியாவில் தினமும் 1,000 குழந்தைகள் செத்து மடிகின்றனர் என்கிறது புள்ளிவிவரம். இவ்வாறெல்லாம் அடிப்படை வசதியே இல்லாது மக்கள் அல்லலுரும் வேளையில் அவர்களுக்கு அடிப்படைத் தேவை, "கணிப்பொறியா...இல்லை ...கழிப்பறையா..?"
600 மில்லியன் இந்தியர்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லை. என்ன கேவலம் இது? இந்த கேவலம் புரிய வேண்டியவர்களுக்கு புரியவில்லையே. அறிய வேண்டியவர்கள் அறிந்தும் அறியாமலே உள்ளனரே. இலவசம் என்ற பெயரில் ஒரு ஏமாற்றம் அல்லவா அரங்கேறிக்கொண்டிருக்கிறது. இலவசமாய் 'கணிப்பொறி' கொடுக்கும் அரசு, காசுக்கு அல்லவா கட்டண 'கழிப்பறை' வசதி கொடுக்கிறது. கழிப்பறை வசதியின்றி காட்டிலும், மேட்டிலும், இருட்டிலும், நடு ரோட்டிலும் கழிப்பிடம் தேடி அலையும் இந்நாட்டு ஏழைகள் கழிப்பறை காண்பது எப்போது? கணிப்பொறி கொடுத்துவிட்டு, மின்சாரத்தை துண்டித்துவிட்டு, எம்மை கவிழ்த்து விளையாடியது போதும் அரசே! எப்போது நீ அடிப்படை வசதியான கழிப்பறை கொடுக்கப் போகிறாய்? தடுமாறும் உறவுகளே, விழித்தெழ வேண்டிய தருணம் இதுவே. நமக்கு கலர் டி. வி. யும் வேண்டாம், கணிப்பொறியும் வேண்டாம். முதலில் அடிப்படை வசதியான கழிப்பறையைக் கொடுக்கட்டும் அரசு. மக்களின் அடிப்படை வசதிகளை நிவர்த்தி செய்ய வேண்டிய அரசு செய்யத் தவறும் போதெல்லாம், நாம் அனைவரும் சொல்ல வேண்டும், "சீச்சீ" அடிப்படை வசதியை வழங்காத அரசு ஓர் அரசா' என்று.