My dear YOIs after celebrating Ria's birthday. LONG LIVE YOI..!

With my Jesuit Friends in Pune.

With My Jesuit Family in Kodaikanal after our Summer Meet, 2015.

Enacting in the SSU play 'It's Great to be Young' directed by beloved Cyril Desbruslais.,SJ.

Clicked during my visit to Liverpool.

Showing posts with label Poems Tamil. Show all posts
Showing posts with label Poems Tamil. Show all posts

Tuesday, 17 December 2013

தந்தையே வாழ்க....!

தந்தையே வாழ்க.....!
திருத்தந்தையே வாழ்க
தரணி போற்றிடும் தனிப்பெரும் தலைவா
உம் திருவடி தொடர எமக்கொரு வரம்தா !
இயேசு சபை ஈன்றெடுத்த இக்கால இறை மகனே
இதயத்தை கவர்ந்துவரும் அணையாத அகல்விளக்கே!
மணமகளாம் திருச்சபையின் மாணிக்கத் தலை மகனே
மாற்றத்தைக் கொணர்ந்துவரும் மங்காத ஒளிவிளக்கே!
தத்தளித்த திருச்சபையை தத்தெடுத்துக் கொண்டவரே
சத்தளித்து திருச்சபையில் சமத்துவத்தைக் கொணர்பவரே!
ஆட்சி ஆணவம் களைந்திடவே- இறை
அன்பும் அமைதியும் விளைந்திடவே
அனுதினம் நீரும் உழைக்கின்றீர்
அதற்காய் எமையும் அழைக்கின்றீர்!
இறைவனை இதயத்தில் சுமப்பதனால்
இகம்தனில் இரக்கத்தில் திகழ்கின்றீர்!
அருள்தனை அனுதினம் சுவைப்பதனால்
அகம்தனில் அன்பினில் மகிழ்கின்றீர்!
பேழையில் வாழும் இறைவனையே
ஏழையில் காண விழைகின்றீர்...!
எளியோர்க்கான திருச்சபையை
இகமதில் காண விழைகின்றீர்..!
மனிதம் மலர்ந்திட புனிதம் புலர்ந்திட
அயராது உழைக்கும் எம் அருட்சுடரே!
அகிலத்தில் அனைத்தையும்; அன்பால் வென்றாய்
அகமதில் ஆண்டவரை உன்பால் கொண்டாய்
பகட்டும் பணமும் எதிரி என்றாய்
பணிவும் பரிவும் உறுதி என்றாய்
பட்டம் பதவி பணிக்கு என்றாய்
பணிவில் துணிவாய் பலரை வென்றாய்!
ஏழையின் இறைவனைப் போற்றிடவே
ஏழைகள் வாழ்வினைத் தேற்றிடவே
மறைந்திடும் மனிதத்தை மாற்றிடவே
அசிசி பெயரினைத் தேர்ந்தாயோ
நவீன அசிசியாய் பிறந்தாயோ!
நாளும் பிறரைக் கவர்ந்தாயோ..!
எளிமையை வாழ்வினில் உணர்பவரே
வலிமையை ஏழ்மையில் காண்பவரே
தெருக்களில் இறங்கி பணி செய்ய
குருக்களை துணிந்து அழைத்தவரே
ஆயுதம் ஒழித்திட ஆசித்தாய்
அமைதி செழித்திட யாசித்தாய்
வெறும் வார்த்தையால் அன்றி
பெரும் வாழ்க்கையால் இன்று
சான்று பகரும் சரித்திரமே...
புரட்சிப் பாதையில் நிதமும் நீர்
தொடர்ந்திட யாமும் விழைகின்றோம்!
தாழ்ச்சியில் சிறந்த தந்தையே நீர்
மாட்சியில் பிறந்த விந்தையே நீர்!
வாழிய...வாழிய...தந்தையே நீர்
வாழிய என்றும் வாழியவே...!!!

Monday, 11 November 2013

எழுவோம்.... மீண்டும்.....!

கடற்கரை ஓரத்திலே
எம் ...
தியாகத் தலைவியே
உன்னைக் கண்டதும் 
கலங்குகின்றன கண்கள்!
உன்னை
உயிரோடு பிடித்து
உடலினை வதைத்து
கைகளைக் கட்டி
கதறக் கதற 
கொடுமை செய்ததே
கயவர்கள் கூட்டம்!
உம் அழகிய உருவை 
அழுகிய நிலையில் 
கண்டதும் கலங்குகின்றன
எம் கண்கள்! 
வீரப் பெண்ணே உன்னை
கொன்றுவிட்டனரே
கோழைகள்....
கோழைத்தனமாய்!
வாழப் பிறந்தாய் நீ
ஆம்...
தனித்தமிழ் ஈழத்தில்
வாழப்பிறந்தாய் நீ!
ஆளப்பிறந்தாய் நீ
ஆம்...
தனித்தமிழ் ஈழத்தை
ஆளப்பிறந்தாய் நீ!
ஆனால்....
எம் புரட்சிப் புதல்வியே
உன்னை அழித்து விட்டனரே
அந்த சிங்கள வெறியர்கள்!
உன் நிலை கண்டு
எம்மிலே உள்ள 
இரத்தநாளங்கள் எல்லாம்
கொதிக்கின்றன ஒன்றாய்...!
இழந்த உன்னை 
மீண்டும் பெறுவோம்! 
விழுந்த மண்ணில் 
மீண்டும் எழுவோம்!
என்ற...
உயரிய நம்பிக்கையோடு.....!

Monday, 4 November 2013

இணைபிரியா...எம் அக்கா....இசைப்பிரியாவே....!

புரட்சிப் புதல்வியே....
இணையத்தில்
உம் துயரம்
படிக்கின்ற போது
இதயத்தில்
உம் தியாகம்
துடிக்கின்றதே!
மாணவர்
என்ற மாண்பிலே
படிக்கின்ற சமுதாயம்
உனக்காக நாளும்
துடிக்கின்ற போது!
அரசியல்
என்ற பெயரிலே
நடிக்கின்ற சமுதாயம்
தனக்காக நாளும்
நடிக்கின்றதே!
இணைபிரியா
எம் அக்கா
இசைப்பிரியாவே...
உன் இழப்பை எண்ணி
தவிக்கிறது நாளும்
தன்மானமுள்ள
தமிழ் சமூகம்!
தமிழுக்காய்...
எம் ஈழத்தமிழருக்காய்
தன்னுயிரைக்  கொடுத்தாயே
எம் தியாகத்தலைவியே...!
அன்று உம்மை
உருக்குலைத்து
உயிரெடுத்தனர்
உயிர் உயர்வு
தெரியாத அரக்கர்கள்!
ஆனால்...
இன்று எம்மை
அழிக்க நினைத்தாலும்
அழிக்க இயலாது
ஒழிக்க நினைத்தாலும்
ஒழிக்க இயலாது!
ஏனெனில்
இணைபிரியா
எம் அக்கா
இசைப்பிரியாவே!
இன்று யாம்
உம்மை எம் இதயத்தில்
அணையாது சுமக்கிறோம்!
தமிழ் ஈழமே
தனித்தீர்வு என
தணியாது நடக்கிறோம்!
புரட்சிப் புதல்வியே
நீர் ஏற்றிய புரட்சித்தீ
அணையாது காப்போம்
அதற்காக யாம்
அயராது உழைப்போம்..!

Thursday, 5 September 2013

ஆயுதம் ஒழித்திட... அமைதியை வளர்த்திட...


ஆயுதம் ஒழித்திட...
அமைதியை வளர்த்திட...
எங்கே சென்றது எம் அமைதி...?
அறிவியல் வளர்ந்து விட்டது
மனிதனின் அறியாமை குறையவில்லையே!
ஆன்மீகம் வளர்ந்து விட்டது
மனிதனின் ஆணவம் குறையவில்லையே!
இயந்திரம் வளர்ந்து விட்டது
மனிதனின் இல்லாமை குறையவில்லையே!
அதிகாரம் வளர்ந்து விட்டது
மனிதனின் அகங்காரம் குறையவில்லையே!
பணபலம் வளர்ந்து விட்டது
மனிதனின் பாசாங்கு குறையவில்லையே!
இல்லாமையிலும், இயலாமையிலும்
அறியாமையிலும், ஆணவத்திலும்
அமைதியை அன்றோ இழந்துவிட்டனர் மனிதர்கள்?
அமைதியை மறந்து ஆயுதத்தை கையிலெடுத்தால்
நாம் இழப்பது நம் அமைதியைத்தானே?
அமைதியில் இருப்பது எத்துணை உயரிய ஆன்மீகம்!
அதிகார பலத்தையும்,
ஆயுத பலத்தையும்
கையில் கொண்டால் அழிக்கலாமோ
அண்டை நாட்டினரை?
நாடு வேறு என்றாலும்,
நாகரிகம் வேறு என்றாலும்
சாதி வேறு என்றாலும்,
சமுதாயம் வேறு என்றாலும்
மனிதர்கள் என்ற வகையிலே
நாம் அனைவரும் சமம் தானே?
மனிதர்கள் நாம் மகிழ்வினில் வாழ
அவசியம் அமைதி அன்றோ!
அவசியமான அமைதியை அனுதினமும்
அதிகாரத்தின் பெயரிலும், ஆணவத்தின் பெயரிலும்
நாமே அழிப்பது அநீதி அன்றோ!
அழிய வேண்டும் அமைதியை அழிக்கும் அவல நிலை
அமைதியை சீர்குலைக்கும் ஆயுதங்களை வெறுத்திடுவோம்!
அமைதியின் கனியினை வாழ்வினில் தினம் அறுத்திடுவோம்!
ஆயுதம் ஒழித்திட...
அமைதியை வளர்த்திட...
அனுதினம் நாமும் யாசிப்போம்!

Monday, 26 August 2013

மாறுவானா என் மகன்...?

இன்று புரட்சித் தாயின் திருநாள்

தன் ஒரே மகனின் மனமாற்றத்திற்காய்

செபம் பல செய்து, தவம் பல புரிந்து

"மாறுவான் என் மகன்" என காத்திருந்து

மாற்றமும் கண்ட ஒரு புரட்சிப் பெண்ணின் புனித நாள்!

ஆம்...புனித மோனிகாவின் திருநாள்!

தீய வழியில் சென்ற தன் மகனை மீட்க

அவர் பட்ட அல்லல்கள் ஆயிரம் ஆயிரம்...

அன்று மட்டும் அல்ல...

இன்றும் தான் எத்தனையோ
தாய் மார்கள்

தங்களின் பிள்ளைகளைத் தொலைத்துவிட்டு

பிள்ளைகளின் மனமாற்றத்திற்காய் காத்திருக்கின்றனர்...

"மாறுவான் என் மகன்" என ஏங்கித் தவிக்கும்

அம்மாக்கள் ஆயிரம் ஆயிரம்...

பத்து மாதம் தன் கருவிலே சுமந்த தியாகத்தின் உருவாம்

தாயை மதிக்க மறக்கின்றனரே
மறுக்கின்றனரே பிள்ளைகள்

மகன்களின் மனமாற்றத்திற்காய் ஏங்கும்

தாய்களின் தியாகம் ஜெயிப்பது எப்போது?

புரட்சித் தாய்களின் புண்ணிய வாழ்வு

பிள்ளைகளின் மன மாற்றத்திற்கு வித்திடட்டும்....

தாய்களின் செபமும், தவமும், தியாகமும்

பிள்ளைகளின் புது வாழ்வுக்கு சத்திடட்டும்!!