தந்தையே வாழ்க.....!
திருத்தந்தையே வாழ்க
தரணி போற்றிடும் தனிப்பெரும் தலைவா
உம் திருவடி தொடர எமக்கொரு வரம்தா !
இயேசு சபை ஈன்றெடுத்த இக்கால இறை மகனே
இதயத்தை கவர்ந்துவரும் அணையாத அகல்விளக்கே!
மணமகளாம் திருச்சபையின் மாணிக்கத் தலை மகனே
மாற்றத்தைக் கொணர்ந்துவரும் மங்காத ஒளிவிளக்கே!
தத்தளித்த திருச்சபையை தத்தெடுத்துக் கொண்டவரே
சத்தளித்து திருச்சபையில் சமத்துவத்தைக் கொணர்பவரே!
ஆட்சி ஆணவம் களைந்திடவே- இறை
அன்பும் அமைதியும் விளைந்திடவே
அனுதினம் நீரும் உழைக்கின்றீர்
அதற்காய் எமையும் அழைக்கின்றீர்!
இறைவனை இதயத்தில் சுமப்பதனால்
இகம்தனில் இரக்கத்தில் திகழ்கின்றீர்!
அருள்தனை அனுதினம் சுவைப்பதனால்
அகம்தனில் அன்பினில் மகிழ்கின்றீர்!
பேழையில் வாழும் இறைவனையே
ஏழையில் காண விழைகின்றீர்...!
எளியோர்க்கான திருச்சபையை
இகமதில் காண விழைகின்றீர்..!
மனிதம் மலர்ந்திட புனிதம் புலர்ந்திட
அயராது உழைக்கும் எம் அருட்சுடரே!
அகிலத்தில் அனைத்தையும்; அன்பால் வென்றாய்
அகமதில் ஆண்டவரை உன்பால் கொண்டாய்
பகட்டும் பணமும் எதிரி என்றாய்
பணிவும் பரிவும் உறுதி என்றாய்
பட்டம் பதவி பணிக்கு என்றாய்
பணிவில் துணிவாய் பலரை வென்றாய்!
ஏழையின் இறைவனைப் போற்றிடவே
ஏழைகள் வாழ்வினைத் தேற்றிடவே
மறைந்திடும் மனிதத்தை மாற்றிடவே
அசிசி பெயரினைத் தேர்ந்தாயோ
நவீன அசிசியாய் பிறந்தாயோ!
நாளும் பிறரைக் கவர்ந்தாயோ..!
எளிமையை வாழ்வினில் உணர்பவரே
வலிமையை ஏழ்மையில் காண்பவரே
தெருக்களில் இறங்கி பணி செய்ய
குருக்களை துணிந்து அழைத்தவரே
ஆயுதம் ஒழித்திட ஆசித்தாய்
அமைதி செழித்திட யாசித்தாய்
வெறும் வார்த்தையால் அன்றி
பெரும் வாழ்க்கையால் இன்று
சான்று பகரும் சரித்திரமே...
புரட்சிப் பாதையில் நிதமும் நீர்
தொடர்ந்திட யாமும் விழைகின்றோம்!
தாழ்ச்சியில் சிறந்த தந்தையே நீர்
மாட்சியில் பிறந்த விந்தையே நீர்!
வாழிய...வாழிய...தந்தையே நீர்
வாழிய என்றும் வாழியவே...!!!