Sunday 11 January 2015

பாவ சங்கீர்த்தனம் ஒரு பாக்கியமே...!

இதமான தென்றல் இதயத்தை வருடும் அந்த அருமையான மாலைப் பொழுதில் என் இல்லத் தலைவரோடு அருகில் உள்ள புனல்வாசல் என்ற  ஊருக்கு மாலைத் திருப்பலிக்காகச் சென்றேன். அருள் நிறை அருளப்பர் தேவாலயத்தில் மக்களின் பங்களிப்பைக் கண்டு பிரமித்துப்போனேன். யாரும் சொல்லாமலே வரிசையாக வந்து அழகாய் அமர்ந்த சிறுவ, சிறுமிகளைப் பார்த்து வியப்படைந்த வண்ணம் ஆலயத்தின் இறுதி இருக்கையிலே அமர்ந்து ஆண்டவனைத் தரிசிக்கத் தயாரானேன். எப்பொழுதும் போல என் இல்லத்தலைவர், திருப்பலிக்கு முன்னரே சென்று பாவசங்கீர்த்தன தொட்டிலில் அமர்ந்து தனது பணியைத் தொடங்கினார். “இந்தக் காலத்துல இப்புடி சாமியாருங்க போயி பூசைக்கு முன்னாடியே பாவசங்கீர்த்தன தொட்டிலில் அமர்வது அரிதாகி விட்டதே..." என்று யோசித்த வண்ணம் அமர்ந்து கொண்டிருந்தேன். ஒரு சில சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் சென்று தங்களின் பாவங்களை அறிக்கையிட்டு, மனத்துயர் பெற்று இறையாசீர் அடைந்ததைக் கண்டு, “ச்சே...இப்புடி விசுவாசத்தோட மக்கள் வாழ்றாங்களே....நம்மல்லாம் இவங்களோட விசுவாசத்துக்கு முன்னாடி எம்மாத்திரம்..!" என்று யோசித்தவாறு இருந்தேன். என் இல்லத்தலைவர் திருப்பலி ஆரம்பித்து, அருமையாகப் பாடி, மக்களைப் பரவசப்படுத்த தொடங்கினார். திருப்பலி ஆரம்பித்து, ஓர் ஐந்து நிமிடங்கள் கழித்து தாமதமாக ஓர் அம்மா வந்து என் அருகிலே அமர்ந்தார். “பாவம்...வீட்டு வேலையை முடிச்சுட்டு வர்றதுக்கு நேரமாய்ருச்சு போல..."என்று எனக்குள் யோசித்த நான், திருப்பலி முழுவதும் அந்த அம்மாவின் பக்தியால் ஈர்க்கப்பட்டேன். வயதான காலத்திலும் முழந்தாள் படியிட்டு பக்தியோடு அவர் இறைவனிடம் வேண்டுதல் செய்தது என் இதயத்தின் ஆழத்தில் விசுவாச வேட்கையைத் தூண்டியது. திருவிருந்து நேரத்தில் அனைவரும் சென்று இறைவுணவைப் பகிர இந்த அம்மா மட்டும் அமர்ந்த இடத்திலேயே, சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த இயேசுவோடு ஏதோ உரையாடிக் கொண்டிருந்தார். உடனே அந்த அம்மாவிடம் கேட்க வேண்டும் என என்னில் எண்ணங்கள் எழுந்தாலும், திருப்பலி நேரத்தில் பேசுவது முறையல்ல என எண்ணிக் காத்துக் கொண்டிருந்தேன். திருப்பலி இனிதே நிறைவு பெற, அந்த அம்மாவிடம் பேச யாசித்து காத்திருந்தேன். திருப்பலி முடிந்தும் ஒரு பத்து நிமிடங்கள், அமைதியாக அந்த அம்மா இறைவேண்டுதல் செய்துவிட்டு தள்ளாடி தள்ளாடி நடந்து வந்தார். “அம்மா...நல்லா இருக்கீங்களா?" என்று கேட்டவாறே, “கோயில்ல ரொம்ப பக்தியா இருந்தீங்கம்மா...இந்த வயசுலயும் முழங்கால் போட்டு வேண்டுறீங்களே..நீங்க உண்மையிலே...." என்று ஆச்சிரியமாய் சொல்லி முடிப்பதற்குள், “இதெல்லாம் என்னப்பா வலி....இயேசு சாமியைப் பாத்தியா...அவரு படாத கஷ்டமா..?" என்று என்னைக் கேட்டவாறே சிலுவையில் தொங்கிய இயேசுவைப் பார்த்தார்.“அம்மா... இவ்வளவு பக்தியா இருக்கீங்க... ஆனா.. நீங்க ஏன் இன்னைக்கி நன்மை வாங்கல...." என்று நான் வினவ, “அட..அதெல்லாம் பார்த்தியாக்கும்..." என்று சலித்துக் கொண்டே ஒரு சிரிப்பு சிரிக்க மேலே இருந்த அவரின் ஒற்றைப்பல் மட்டும் தெளிவாய்த் தெரிந்தது.  அந்த சிரிப்பிலே, கவலையின் மத்தியிலும் மகிழத்தெரியும் மந்திரம் தெரிந்தது. அது என் மனதைக் கவர்ந்தது. “சரி..ஏம்மா..நீங்க நன்ம வாங்கல..."என மறுபடியும் நான் கேட்க, “இன்னைக்கி நான் பூசைக்கு கொஞ்சம் லேட்டா வந்துட்டேன்ப்பா...அதுனால பாவசங்கீர்த்தனம் செய்யல...பாவசங்கீர்த்தனம் செய்யாம நன்ம வாங்குறது நல்லது இல்ல..." என்று சொல்லத்தொடங்கி, “எப்பவுமே...நான் நல்ல பாவசங்கீர்த்தனம் செஞ்சாத்தான்..மனசுக்கு நிம்மதி இருக்கும்....என்னோட வீட்டுல, கிராமத்துல, என்னோட மனசுல எவ்வளவு சுமை இருந்தாலும் பாவசங்கீர்த்தனம் செஞ்சு திவ்ய நற்கருணை உட்கொண்டா எனக்கு அவ்ளோ மனசுக்கு திருப்தியா இருக்கும்பா..." என்ற அவர், “கிறிஸ்தவளா பொறந்ததுக்கு நான் ரொம்ப கொடுத்து வச்சுருக்கனும்...இதுல பாவசங்கீர்த்தனம் உண்மையிலே எனக்கு கெடச்ச ஒரு பெரிய பாக்கியமாப் பாக்குறேன்...சரிப்பா நான் வர்றேன்..." என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு அவர் நகர்ந்தாலும் அவரின் வார்த்தைகள் என்னிலே அலை மோதிக்கொண்டிருந்தன. பாவசங்கீர்த்தனத்தின் பலன் எந்த அளவுக்கு ஒரு ஏழைப் பெண்ணின் துயர் துடைக்கும் கருவியாய் உள்ளது என்ற ஆழமான அர்த்தம் புரிந்தது. பல நேரங்களில், பாவ சங்கீர்த்தனத்தை வெறுமனே ஒரு சடங்காகப் பார்க்கும் கிறிஸ்தவர்கள் மத்தியில், அந்த அம்மாவைப் போன்று எத்தனையோ நல் உள்ளங்கள் பாவசங்கீர்த்தனத் தொட்டிலில் இறை அனுபவம் பெற்றுச் செல்கிறார்கள் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. கிறிஸ்தவர்களாய் வாழ அழைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு கிறிஸ்தவனும், கிறிஸ்தவளும் பாவ சங்கீர்த்தனம் நமக்கு கிடைத்த ஓர் ஒப்பற்ற பாக்கியமாய்க் கருதி பாவசங்கீர்த்தனம் மூலம் பலன் பெற வேண்டும், பலம் பெற வேண்டும். கிறிஸ்தவ மக்களுக்கு, பாவசங்கீர்த்தனம் ஒரு பாக்கியமாய் மாறிட வேண்டுமெனில், மக்களும், குருக்களும் இன்னும் அதிகமாக முக்கியப் பங்கு வகிக்க வேண்டும். குருக்கள் அனைவருக்கும் நித்திய குருவாம் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து கொடுத்த ஓர் ஒப்பற்ற கொடை பிறரின் பாவங்களை மன்னிப்பது. அத்தகைய ஒப்புயர்வற்ற பணியினை ஒவ்வொரு குருவும் விரும்பி செய்ய வேண்டும், பாவசங்கீர்த்தனத் தொட்டிலிலே அமர்ந்து பிறரின் பாவச்சுமையை விரும்பி ஏற்று அவர்களுக்காக இறைவனிடத்தில் மன்னிப்பு வேண்டுவது குருக்களுக்கு கிடைத்த ஒரு பெரும் பாக்கியமே. நமது திருத்தந்தை ஆசிப்பது போல, “பாவ மன்னிப்பு அறை சித்திரவதைக் கூடமாக மாறி விடக்கூடாது.." மாறாக, ஒவ்வொரு குருவும் நித்திய குருவாம் இயேசுவை தன் வாழ்விலே பிரதிபலித்து பாவசங்கீர்த்தனத் தொட்டிலிலே, நம் இறைமக்களின் பாவங்களை மன்னித்து அவர்களுக்கு ஆறுதல் வழங்கி, ஆன்ம அமைதியை வழங்கிட ஆசிக்க வேண்டும். அப்போது, நிச்சயம் இறைமக்கள் அனைவரும் குருக்களிலே நம்பிக்கை கொண்டு, தங்களின் விசுவாச வாழ்வை இன்னும் அதிகமாக புதுப்பித்து கொள்ளலாம்.  நம் வாழ்விலே பாவசங்கீர்த்தனம் பெரும் பாக்கியம் என்பதை உணர்ந்து ஒவ்வொரு கிறிஸ்தவரும் பாவங்களை அறிக்கையிட்டு நம் பாவ வாழ்விலிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் விலகி தூய வாழ்வை நோக்கிப் பயணிக்க முற்படும் போது அகமதில் இறைவனின் அன்பை உணர்ந்திடலாம், இறைவனின் அருளை இகமதில் நாம் கொணர்ந்திடலாம். 

1 comments:

Unknown said...

உம் கட்டுரையை படித்ததே எனக்கு பாவசங்கீர்தனம் செய்தது போல் ஆயிற்று