Saturday 21 September 2013

இதுவன்றோ மனிதம்..!

ஜீலை மாதம் 13 ஆம் தேதி சனிக்கிழமை. ராமநாதபுரம் மாவட்டம் ஓரியூர் கிராமத்திலிருந்து, தஞ்சாவூர் மாவட்டம் விளாங்குடி என்ற கிராமத்தை நோக்கிய பேருந்துப் பயணம். அப்பயண நேரத்திலே உறங்கிக் கொண்டிருந்த என்னை உசுப்பி விட்ட ஓர் அனுபவம். தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலே நான் வந்த பேருந்து நிற்க, விரட்டி அடித்துக் கொண்டு பலர் பேருந்துக்குள்ளே ஏறினர். மங்களகரமாக மல்லிகைப் பூச்சூடி தமிழ்நாட்டுப் பாணியிலே தாவணி அணிந்து இளம் மங்கையர் சிலர் வந்தனர். அவர்களைத் தொடந்தாற்போல் ஒரு சில இளைஞர்களும் வந்தனர். அவர்களெல்லாம் ஏதோ நன்கு படித்தவர்கள் போல கண்ணுக்குப் பட்டனர். அனைவர் கைகளிலும் இருந்த அலைபேசி அவர்களின் விரல்களால் அடிவாங்கிக் கொண்டிருந்தது. முண்டி மோதி உள்ளே வந்த அவர்களைத் தொடர்ந்து களைப்போடு நடுத்தர வயது மிக்க ஒரு சில ஆண்களும், பெண்களும் ஏதோ கட்டிட வேலை பார்த்து விட்டு கால், கைகளிலெல்லாம் சிமெண்ட் படிந்ததோடு கைகளில் பழைய தூக்கு வாலிகளோடு வந்தனர். அவர்களோடு ஒரு வயதான மூதாட்டியும் வந்தார். பார்ப்பதற்கு மிகவும் பரிதாபமாக இருந்தது அந்த மூதாட்டியின் கோலம். “இந்த வயதான காலத்தில் ஏன் இப்படி கஷ்டப்பட்டு கட்டிட வேலைக்கு போகிறார் இவர்? ஒரு வேளை குழந்தைகள் கஞ்சி ஊத்த மறுத்திருப்பார்கள்” என என் உள் மனதிற்குள் எண்ணிக் கொண்டே அந்த மூதாட்டியை நோக்கிய வண்ணம் இருந்தேன். அனைவரும் அமர்ந்த பிறகு மீதி இருந்த ஓர் இருக்கையிலே அமர்ந்தவாரு அவர் சொன்ன வார்த்தைகள் என் காதில் விழுந்தன. “பாவம், யாரு பெத்த புள்ளையோ? முப்பதாயிரம் ரூபாய தொலச்சிட்டு அழுதுகிட்டு இருக்கா. பாவம் பணத்த பத்திரமா வைக்காம எவனோ திருட்டுப் பய அடிச்சிட்டு போயிட்டானே?”என்று பணத்தை தொலைத்து விட்டு பரிதாப நிலையில் இருந்த வேறொரு பெண்ணுக்காக புலம்பினாள் உழைப்பின் களைப்பில் இருந்த அந்த மூதாட்டி. “போனது போயிருச்சு அத நெனச்சி என்ன பண்றது. நீ ஏன் பாட்டி கவலப்படுற?” என்று படித்தவர் போல் இருந்த ஒருவர் கேட்க, “தம்பி… உழச்சு சம்பாதிச்சா பணத்தோட அரும தெரியும். பட்டம் படிச்ச உங்களுக்கு தெரியுதோ, இல்லையோ பள்ளிக் கூட நெழலுக்கே போகாம கட்டிடம் கட்டி கஷ்டப்படுற எனக்கு காசோட கஷ்டம் தெரியும் பா!”என்று சொன்னதைக் கேட்டு வாயடைத்துப் போனான் அந்த வாலிபன். அவனைத் தொடர்ந்து வேறொருவர் அந்த பாட்டியிடம் “வேற யாரோ தொலச்சதுக்கு நீ என்ன பாட்டி ரொம்ப கஷ்டப் படுற?” என்று கேட்க, “என்னப்பா நீ பேசுற. ஆயிரம்தான் இருந்தாலும் அவளும் ஒரு மனுசி தானே. முப்பதாயிரம் சேர்க்க எவ்வளவு கஷ்டப்பட்டுருப்பா?
நடந்த அனைத்தையும் மௌனமாக கேட்டுக் கொண்டிருந்த எனக்கு உண்மையான மனிதத்தினை அங்கே காண முடிந்தது. தன்னைப் பற்றியே சுயநலப்போக்கோடு சிந்திக்கும் மனிதர்கள் மத்தியில் அந்த மூதாட்டியின் மனநிலை என்னை அதிகம் கவர்ந்தது. பட்டம் படித்தும் பலர் தங்களைத் தவிர வேறு யாரையும் நினைக்க மறக்கும், மறுக்கும் இந்த சுயநல உலகிலே, உழைத்த களைப்பிலும் பணத்தினை தொலைத்து விட்டு கஷ்டப்படும் முகவரி தெரியாத ஒருவருக்காய் வருந்துகிறாரே இந்த மூதாட்டி. அந்த தருணமே சுய நலம் மறைந்து பிறர் நலம் பிறக்க வேண்டிய முக்கியத்தை உணர்ந்தேன். படித்துவிட்டோம் என்று பகிரங்கமாய் சொல்லிக் கொண்டு அலைபேசிகளை அழுத்தியே காலத்தைக் கழித்து, தன்னைப் பற்றியே சிந்திக்கத் துடிக்கும் என்னைப் போன்ற படித்தவர்கள் அந்த மூதாட்டி போன்ற படிக்காத பாமரர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய வாழ்க்கைப் பாடங்கள் ஏராளம். ஆயிரம்தான் இருந்தாலும் அவனும் மனிதனே என்று அடுத்தவனுக்காய் பிறர் நலத்தோடு சிந்திக்கும் போது மனிதம் நிச்சயம் மலர்ந்திடும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. சுயநலச் சாக்கடையில் சோம்பேறிகளாய் செத்தழிந்தது போதும், பிறர் நலம் பேணிக் காத்திட பிறருக்காக நம் வாழ்வினை அர்ப்பணிப்போம். அப்போது அர்த்தம் பெறுவது நம் வாழ்வு மட்டும் அல்ல பிறரின் வாழ்வும் தான்;. சுயநலம் மறைந்து பிறர் நலம் பிறந்திடும் போது “இதுவன்றோ மனிதம்!” என மனிதத்தைப் போற்றிடலாம், மானுடத்தை மாற்றிடலாம், மகத்தான பணியை மனிதத்திற்கு ஆற்றிடலாம்.

2 comments:

Zenith SJ said...

touching story. All must learn from her life. The the world will live for the sake of others.

Zenith SJ said...
This comment has been removed by the author.