Wednesday 4 September 2013

ஆசிரியப்பணி அறப்பணியே...


கொம்படிமதுரை – சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஒரு குக்கிராமம். இக்கிராமத்திலுள்ள ஆர்.சி தொடக்கப் பள்ளியில் நான் தொடக்கக் கல்வி பயின்றேன். ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதம் நான் என் பள்ளியைப் பற்றி அதிகம் நினைப்பதுண்டு. அதற்கு காரணம் என் கையினைப் பிடித்து எழுத்து பலகையிலே “அ, ஆ, இ…” எழுத சொல்லிக் கொடுத்த ஆசான்கள்தான். இத்தனை ஆண்டுகள் கடந்தும் அவர்களை நான் நினைவுகூறக் காரணம் அவர்கள் ஆற்றிய அறப்பணியாம் ஆசிரியப்பணியே. அவர்களின் அன்பையும், அடியோடு கூடிய அரவணைப்பையும், கஷ்டங்கள் மத்தியில் அவர்களின் கடின உழைப்பையும் கண்டு வியந்த மாணவர்களில் நானும் ஒருவன். இத்தனை வருடங்களையும் விட இந்த வருடம் என் பள்ளியைப் பற்றிய பெருமை என்னுள் அதிகம் எழுந்தது. அதற்கு ஒரு காரணம் உண்டு.
அன்று தொடக்கப் பள்ளியாக இருந்த எனது பள்ளி இன்று தூய யூஜின் உயர் நிலைப் பள்ளியாக உயர்ந்துள்ளது. சாதாரண ஏழை மாணவ, மாணவிகள் பயிலும் இப்பள்ளியில் கடந்த கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100மூ  தேர்ச்சி. நிறைய மாணவர்கள் நல்ல மதிப்பெண்களும் எடுத்திருந்தனர். எத்தனையோ பள்ளிகள் சாதனை படைக்க பல வகைகளில் முயற்சித்தும் முடியாது திகைத்த தருணத்தில் இக்  கிராமப் புற பள்ளியின் குட்டிச் சாதனை உண்மையில் என்னை குதூகலப்படுத்தியது. தேர்வு முடிவுகள் அறிந்து, அங்கு பணி செய்யும் என் அண்ணியிடம் வாழ்த்துக்கள் சொன்ன போது அவர் சொன்னார் “இதற்கு முக்கிய காரணம் இங்கு பணி செய்கின்ற ஒரு சில உண்மையான, உயரிய பணி செய்யும் தியாக மனமுடைய ஆசிரியர்களே!” என்று. இக்காலத்து ஆசிரியர்களைப் பற்றிய மாறுபட்ட எண்ணம் கொண்டிருந்த நான், “அப்படி என்ன பெரிய தியாகம் செய்துவிட்டார்கள் அந்த ஆசிரியர்கள்?” என்று விளையாட்டாய் கேட்ட பொழுது அவர் சொன்னார், “பெரிய படிப்பு படித்துவிட்டு, குறைவான ஊதியத்தில் நிறைவாக பணி செய்கிறார்கள். வேறெங்காவது சென்று அதிக சம்பளத்திற்கு குறைவாக வேலை செய்யலாம். ஆனால் அதைத் துறந்துவிட்டு இக்கிராமத்திலே தியாக மனத்தோடு அவர்கள் செய்யும் பணி போற்றுதற்குரியது.” என் அண்ணி அன்ற சொன்னது என் உள் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. கிராமப்புறத்திலே அவர்கள் செய்யும்  பணி உண்மையில் ஓர் அறப்பணியே என்பதை உணர்ந்து ஆசிரியப்பணியின் மகத்துவத்தை கொஞ்சம் மாண்போடு நினைவு கூற முடிந்தது.
“அன்ன சத்திரம் ஆயிரம் கட்டலும், ஆலயம் பதினாயிரம் நாட்டலும், அன்ன யாவினும் புண்ணியம் கோடி, ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தலே” என்ற உயரிய நோக்கோடு இன்றும் உண்மைப் பணி புரியும் மாமனிதர்களை நினைவு கூற வேண்டிய கட்டாயத்தை உணர்ந்தேன். அந்தப் பள்ளியைப் போல் எத்தனையோ கிராமப் புறங்களில் அடிப்படை வசதியின்றி அல்லலுறும் ஏழைகளுக்கு எழுத்தறிவிக்;கும் ஆசான்களை நினைவு கூர்ந்து அவர்களுக்காய் ஒரு விழா எடுப்பது சாலச் சிறந்ததே. அடித்தட்டு மக்களின் அகவிருள் நீக்கி அறிவொளி ஏற்றிட அயராது உழைக்கும் ஆசிரியர்கள் அனைவரையும் அன்போடு நினைவு கூர்ந்து அவர்களுக்கு விழா எடுக்கத் தான் ஆசிரியர் தினம் அழைப்பு விடுக்கின்றது. செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி ஒரு நிமிடம் யோசித்தால் உண்மை தெரியும். நம் ஒவ்வொருவரையும் உயர்த்திவிட்டு வாழ்வில் பல சாதனை படைக்க, புது சரித்திரம் புடைக்க உசுப்பி விட்ட உன்னதர்கள் நம் ஆசான்கள் என்று. ஆசிரியப்பணி அறப்பணி என்பதை உணர்ந்து பல ஆசிரியர்கள் பணி செய்து ஆசிரியப்பணிக்கு பெருமை சேர்த்தாலும் இன்றைய உலகில் அறப் பணியாம் ஆசிரியப் பணியின் அர்த்தத்தை உணராது கடமைக்கு காலத்தைக் கடத்தும் ஆசிரியர்களும் ஏராளம். “வேலியே பயிரை மேய்வது போல்” கல்விக் கண் திறக்க வேண்டிய ஆசான்களே தங்கள் மாணவர்களை பகடை காய்களாய் பயன்படுத்துவதும், சாதியின் பெயரில் பிரிவினை பார்த்து தாழ்த்தப்பட்ட மாணவர்களை மாண்போடு மதிக்க மறுப்பதும் நம் கண் முன் அரங்கேறும் பரிதாப நிலை. கல்வி காசாக்கப்பட்டு, காசுக்காய் மகத்துவத்தை உணர்த்த மறுக்கும் ஆசிரியர்களும், நம் நாட்டில் இருப்பது நாம் அறிந்ததே. ஏழைக்கொரு கல்வி செல்வந்தனுக்கோ மற்றொன்று என கல்வியில் பாகுபாடு காண்பித்து பிஞ்சுக் குழந்தைகளின் மனதிலே நஞ்சினை விதைக்கும் கொடூரம் பல இடங்களில் நடைமுறையாகிவிட்டது. பள்ளியில் கற்பிப்பதை விட, மாலை நேரங்களில் டியூசன் என்ற பெயரில் பணத்தினை சுரண்டும் ஆசிரியர்கள் எத்தனை, எத்தனை! இவையெல்லாம் அரங்கேறுவது அறப்பணியாம் ஆசிரியப்பணிக்கு இழுக்கு என்பதை ஆசிரியர்கள் பலர் மறந்துவிட்டனர். ஆசிரியர் தினத்தன்று ஆசிரியர்களுக்கு விழா எடுத்து, அவர்களை போற்றி நன்றி கூறுவது மாணவர்களின் மகத்தான கடமையாக இருந்தாலும், ஆசிரியர்கள் தங்களின் கடமையை மறந்துவிடக் கூடாது. ஆம், ஆசிரியர்கள் அனைவரும் தாங்கள் ஆற்றுவது அறப்பணி என்பதை ஆழ்ந்து உணர்ந்து அதன்படி தங்களின் வாழ்வினை மாற்றிட வேண்டும். நவீன உலகிலே நாளுக்கு நாள் சமூக அவலங்கள் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றன. அதற்கு முக்கிய காரணம் ஒழுங்கான கல்வியின்மையே. சமுதாய அவலங்கள் மறைந்து புது சமுதாயம் புலர்ந்திட வேண்டுமெனில் உண்மையான, ஒழுக்கம் நிறைந்த, பாகுபாடில்லாத, மனிதத்தை வளர்க்கும் வளமான கல்வி முறை மலர்ந்திட வேண்டும். அத்தகைய வளமான கல்வி முறையை வார்த்தெடுக்க வேண்டிய வித்தகர்கள் ஆசிரியப் பெரு மக்கள். ஒவ்வோர் ஆசானும் “ஆசிரியப் பணி அறப் பணியே” என்பதை உணர்ந்து அதை முனைப்போடு ஆற்றிட முயற்சிக்கும் போதுதான் அது சாத்தியப் படும். அறப் பணியாம் ஆசிரியப் பணி அறவழியில் செழிக்கும் போது “ உலகம் சம நிலை பெற வேண்டும், உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும்” என்ற அகத்தியரின் கனவு அகிலம் தனில் நனவாகும். அப்போது நாம் சமுதாய அவலங்கள் நீக்கி சமத்துவ வழியில் சாதனை தினமும் படைத்திடலாம், பிறரின் வேதனை நிதமும் துடைத்திடலாம், புது சரித்திரம் வாழ்வில் அமைத்திடலாம்.

0 comments: