My dear YOIs after celebrating Ria's birthday. LONG LIVE YOI..!

With my Jesuit Friends in Pune.

With My Jesuit Family in Kodaikanal after our Summer Meet, 2015.

Enacting in the SSU play 'It's Great to be Young' directed by beloved Cyril Desbruslais.,SJ.

Clicked during my visit to Liverpool.

Tuesday 17 December 2013

தந்தையே வாழ்க....!

தந்தையே வாழ்க.....!
திருத்தந்தையே வாழ்க
தரணி போற்றிடும் தனிப்பெரும் தலைவா
உம் திருவடி தொடர எமக்கொரு வரம்தா !
இயேசு சபை ஈன்றெடுத்த இக்கால இறை மகனே
இதயத்தை கவர்ந்துவரும் அணையாத அகல்விளக்கே!
மணமகளாம் திருச்சபையின் மாணிக்கத் தலை மகனே
மாற்றத்தைக் கொணர்ந்துவரும் மங்காத ஒளிவிளக்கே!
தத்தளித்த திருச்சபையை தத்தெடுத்துக் கொண்டவரே
சத்தளித்து திருச்சபையில் சமத்துவத்தைக் கொணர்பவரே!
ஆட்சி ஆணவம் களைந்திடவே- இறை
அன்பும் அமைதியும் விளைந்திடவே
அனுதினம் நீரும் உழைக்கின்றீர்
அதற்காய் எமையும் அழைக்கின்றீர்!
இறைவனை இதயத்தில் சுமப்பதனால்
இகம்தனில் இரக்கத்தில் திகழ்கின்றீர்!
அருள்தனை அனுதினம் சுவைப்பதனால்
அகம்தனில் அன்பினில் மகிழ்கின்றீர்!
பேழையில் வாழும் இறைவனையே
ஏழையில் காண விழைகின்றீர்...!
எளியோர்க்கான திருச்சபையை
இகமதில் காண விழைகின்றீர்..!
மனிதம் மலர்ந்திட புனிதம் புலர்ந்திட
அயராது உழைக்கும் எம் அருட்சுடரே!
அகிலத்தில் அனைத்தையும்; அன்பால் வென்றாய்
அகமதில் ஆண்டவரை உன்பால் கொண்டாய்
பகட்டும் பணமும் எதிரி என்றாய்
பணிவும் பரிவும் உறுதி என்றாய்
பட்டம் பதவி பணிக்கு என்றாய்
பணிவில் துணிவாய் பலரை வென்றாய்!
ஏழையின் இறைவனைப் போற்றிடவே
ஏழைகள் வாழ்வினைத் தேற்றிடவே
மறைந்திடும் மனிதத்தை மாற்றிடவே
அசிசி பெயரினைத் தேர்ந்தாயோ
நவீன அசிசியாய் பிறந்தாயோ!
நாளும் பிறரைக் கவர்ந்தாயோ..!
எளிமையை வாழ்வினில் உணர்பவரே
வலிமையை ஏழ்மையில் காண்பவரே
தெருக்களில் இறங்கி பணி செய்ய
குருக்களை துணிந்து அழைத்தவரே
ஆயுதம் ஒழித்திட ஆசித்தாய்
அமைதி செழித்திட யாசித்தாய்
வெறும் வார்த்தையால் அன்றி
பெரும் வாழ்க்கையால் இன்று
சான்று பகரும் சரித்திரமே...
புரட்சிப் பாதையில் நிதமும் நீர்
தொடர்ந்திட யாமும் விழைகின்றோம்!
தாழ்ச்சியில் சிறந்த தந்தையே நீர்
மாட்சியில் பிறந்த விந்தையே நீர்!
வாழிய...வாழிய...தந்தையே நீர்
வாழிய என்றும் வாழியவே...!!!

Tuesday 19 November 2013

சுமைகளும் சுகங்களே......

நான் வசிக்கும் விளாங்குடி கிராமத்திலிருந்து திருவையாறு என்ற இடம் நோக்கி பொருட்கள் வாங்குவதற்காக அடிக்கடி செல்ல வேண்டியிருக்கும். ஒவ்வொரு முறையும் அந்த இடம் நோக்கிச் செல்லும் போது ஒரு மூதாட்டி தலையில் எதையோ பாரமாக சுமந்து வருவதைக் காண்பது வழக்கம். "யார் இவர்? ஏன் இந்த வயதான காலத்தில் எதையோ கஷ்டப்பட்டு சுமந்து வருகிறாள்?" என எனக்குள் பல முறை கேட்டிருந்தும் அவரிடம் கேட்க பல நாட்களாக எனக்குத் துணிவு வரவில்லை. ஒரு சில தினங்களுக்கு முன்பாக இரு சக்கர வாகனத்தில் திருவையாறு நோக்கிச் செல்லும் போது அதே காட்சி. அந்த மூதாட்டி தலையில் அதே கூடையில் எதையோ கஷ்டப்பட்டு சுமந்து வந்தார். எப்படியாவது இன்று கேட்டுவிட வேண்டும் என எண்ணி, எனது வாகனத்தை நிறுத்திவிட்டு அவரை வழி மறித்து துணிச்சலோடு கேட்டேன், "பாட்டி, யார் நீங்க? எங்கிருந்து வர்றீங்க? உங்களை நான் தினமும் பார்க்கிறேனே" என்று கேட்க, படிக்காத பாமரருக்கு உரிய அதே பாணியிலே அவர் சொல்ல ஆரம்பித்தார்.
"ஏன் பேரு பாப்பம்மா. என்னோட ஊரு திருவெங்கனூர். திருமானூருக்குப் பக்கத்தில இருக்கு. நான்..." என்று இழுத்தவாரே,"ஆமா, நீ யாரு தம்பி? இதெல்லாம் நீ ஏன் கேட்கிறே?" என்றார்.
 "பாட்டி உங்களை நான் தினமும் பார்ப்பேன். நீங்களும் இந்த சுமையை சுமந்துக்கிட்டு ஆடி, ஆடி நடந்து போவிங்க. எனக்கு உங்ககிட்ட பேசனும்னு தோணுச்சு. அது தான் பாட்டி கேட்டேன். தப்பா எதுவும் கேட்டிருந்தா மன்னிச்சுக்கங்க பாட்டி" என்று சொன்ன அடுத்த தருணமே, "நீ என்னத்த தப்பா கேட்டாய்? ஒரு நாளும் என்னட்ட யாரும் பேசுனது கிடையாது. ஆனா நீ பேசுனீயே, அதுவே பொ¢ய விஷயம் தம்பி" என்று சொன்ன அந்த பாட்டியிடம் "நீங்க தலையில தினமும் எதையோ சொமந்துகிட்டு வர்றீங்களே. அது என்ன பாட்டி" என்று கேட்க "இது தயிரு தம்பி. ஒரு ஒம்போது வருசமா எங்க ஊருல இருந்து திருவையாறுக்கு நடந்தே இதை சுமந்துகிட்டு வர்றேன். பஸ்ல என்னைய ஏத்த மாட்டாங்க! அதுனால நான் நடந்தே வருவேன். ஒரு நாளைக்கு இருநூறு ரூபாய் கிடைக்கும். அதை வச்சுத்தான் வாழ்க்கை ஓடுது.”
“எனக்கு இப்ப 75 வயசு ஆகுது. இருந்தாலும் இதை சுமந்துக்கிட்டு போயி வித்தாத்தான் ஏன் வீட்டில ரெண்டு பிள்ளைகளுக்கு சோறு. அதுனால நான் சுமந்து போயி ஒவ்வொரு நாளும் விக்கிறேன்." 
"75 வயசில இப்படி தலையில சுமையோட ரெண்டு உயிரக் காப்பாத்த, தயிர வித்து கஷ்டப்படுறீங்களே, ஏன் பாட்டி?" என்று கேட்ட அடுத்த தருணம் அவர் பேசவில்லை, அவரின் கண்களில் வடிந்த கண்ணீர் பேசியது. கண்ணீரைத் துடைத்தவாரே, "ரெண்டும் என்னோட பேரப்பிள்ளைங்கப்பா. ரெண்டு குழந்தைகளையும் விட்டுட்டு என் மகள் செத்துப்போயிட்டா. இப்ப நான் தான் இந்த ரெண்டு உயிருக்கும் தயிரு வித்து சோறு போடுறேன்." "ஒம்போது வருசமா, இப்படி கஷ்டப்பட்றீங்களே இது சுமையா தொ¢யலையா?" என்று நான் கேட்க, "எவ்வளவு சுமையா இருந்தாலும், தயிரு வித்துட்டு வீட்டுக்குப் போகும் போது அந்த ரெண்டு உயிர்களும் ஒன்னா 'பாட்டினு' ஓடி வந்து கட்டி அணைக்கும் போது என்னோட "சுமையெல்லாம் சுகமா மாறிடும் தம்பி" என்று அவர் சொன்ன போது என்னையே மறந்து அவரின் சுமை தாங்கிய முகத்தை நோக்க அங்கே மலர்ந்த பரிசுத்த புன்னகை, "எத்தனை சுமைகளாய் இருந்தாலும், விரும்பி சுமந்தால் எல்லா சுமைகளும் சுகங்களே" என்ற வாழ்வின் பாடத்தை எனக்கு உணர்த்தியது.
பிறரின் சுமையை விரும்பி சுமக்கும், ஒரு உண்மையான மனிதத்தைக் கண்டு எனக்குள் சொல்லிக்கொண்டேன், "இதுவன்றோ மனிதம்!" என்று. நாம் வாழும் உலகிலே பிறருக்கு சுமை மேல் சுமையினை ஏற்றி அதிலே சுகம் காணும் மனிதர்கள் மத்தியிலே பிறரின் சுமையினை விரும்பி சுமந்து அதிலே சுகம் காணும் அந்த பாட்டி போன்ற படிக்காத ஆனால் பண்பான மனிதர்கள் ஏராளம். 
மற்றவர்களை வாழ்வில் உயர்த்திட, தங்களால் இயன்ற அளவோ அதனினும் மேலோ பிறரின் வளர்ச்சிக்காய் சுமை சுமந்து சோர்ந்து போய் அந்த சோர்வான சுமையிலே சுகம் காணும் மனிதர்களை இனம் கண்டு அத்தகைய உயா¢ய குணத்தை நமதாக்க ஆசிக்க வேண்டும். "சுமைகளும் சுகங்களே" என்பதை வாழ்வினில் உணர்ந்து நம் வாழ்வினில் சுமைகளை ஏற்று இஷ்டப்பட்டு கஷ்டப்படும்போது வாழ்வு சுகமாய் மாறும் என்பதில் ஐயம் இல்லை. அவ்வாறு பிறரின் சுமையினை சுமந்து அதிலே சுகம் காணும் அந்நொடியே அனைவரும் ஒருமித்து சொல்லலாம் "பிறரின் சுமையினை விரும்பி சுமக்கும் இதுவன்றோ மனிதம்!" என்று.

Monday 11 November 2013

அடிப்படைத்தேவை.....கணிப்பொறியா....கழிப்பறையா...?


               

"சீச்சீ" என்று தமிழ்நாட்டின் பல கிராமங்களிலும், நகரங்களிலும் பல இடங்களில் விளம்பர பலகைகளை நிச்சயம் பலரும் பார்த்திருப்போம். அதைப் பார்த்த ஒரு சிலர் ‘என்ன இந்த விளம்பரம்’ என வியந்திருக்கலாம். ஒரு சிலர் ஒன்றுமே புரியாமல் குளம்பி போயிருக்கலாம். மற்றும் சிலர் பார்த்தும் பார்க்காதது போல "எனக்கு என்ன தேவை வந்திருச்சு?" என எப்பொழுதும் போல சென்றிருக்கலாம். 
ஆனால் அது என்ன என அறிந்து கொள்ள முயற்சித்து பிறருக்கு அதைப் பற்றி விளக்கிக் கூற விழைந்தவர்கள் மிகவும் சொற்பமே. அது என்ன விளம்பரம் என அறிந்து கொள்ள எனக்கும் ஆசை அதிகம் இருந்தது. ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கிவிட்டு என்னை சிந்திக்கத் தூண்டிய அந்த விளம்பரத்தின் பொருள் அறிய ஒரு சில நாட்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. காத்திருப்பதிலும் தனி சுகம் உண்டு அன்றோ! ஒரு சில நாட்கள் காத்திருந்து அதே இடத்தில் பொ¢ய விளம்பர பலகையைக் கண்டேன். கண்ட செய்தி என்னை உண்மையில் "சீச்சீ" என்று சொல்ல வைத்தது.
"திறந்த வெளியில் மலம் கழித்தால் 'சீச்சீ' சொல்லப்பா". "சீச்சீ" கழிவறை இல்லாத வீட்டில் கல்யாண சம்பந்தம் பேசலாமா". "சீச்சீ" எருமை சாணி போடுறது மாதிரி, மனுசங்க திறந்த வெளியில் மலம் கழிக்கலாமா?" என பல கேள்விக் கணைகளைத் தாங்கியிருந்தது அந்த விளம்பரப் பலகை. பல நாட்கள் காத்திருந்த எனக்கு அந்த விளம்பரம் ஓர் அறிய பாடத்தை புகுத்தியது. ஆம், இந்திய பொருளாதாரத்தின் அதிலும் குறிப்பாக தமிழகத்தின்  'ஏற்றமிகு' தோற்றத்தை அப்பட்டமாய் படம் பிடித்து காட்டிய அந்த விளம்பரம் ஆட்சியாளர்களுக்கு ஒரு சாட்டையடியாகத்தான் இருந்திருக்கும்.
"இந்தியா ஒளிர்கிறது, தமிழகம் மிளிர்கிறது' என்றெல்லாம் வெற்று வேசம் போடும் அரசியல் தலைவர்கள் எப்படி சொல்லப் போகிறார்கள் பதில். மக்களின் ஓட்டுக்களைச் சுரண்டி, பதவியில் அமர்ந்து கொண்டு எதை எதையோ இலவசம் என அறிவிக்கும் நம் அரசியல் தலைவர்கள் இத்தனை ஆண்டுகளாக ஒரு ஏமாற்று அரசியல் அல்லவா நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஏன் இந்த கேள்வி?  என இலவச அரசியலை அதிகம் விரும்பும் ஒரு சிலர் கேட்கலாம். இலவசங்களைக் கண்டு நம் உரிமைகளைக் கேட்டு வாங்க மறந்து வாழ்ந்து கொண்டிருக்கும் எத்தனையோ என் உறவுகளுக்கு உண்மை இன்னும் புரியாமலே இருக்கிறது. ஆனால், அது புரியாமலே இருந்து விட்டால் ஒன்றும் புண்ணியம் இல்லை. 
இலவசங்களில் வாழ்வுரிமைகளைத் தொலைத்து விட்டு, ஆகாது என்று தெரிந்தும் அரசியல் வாதிகளில் வெற்று நம்பிக்கையை வளர்த்தால் நம் வாழ்வு அர்த்தம் இன்றி போய்விடும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. அரசியலை பணம் சுருட்டும் நல்ல கருவியாக பயன்படுத்தும் அரசியல் வாதிகள் இருக்கும் வரை, நமது அடிப்படை உரிமைகளும் அடிப்படைத் தேவைகளும் எட்டாக்கனியாகத் தான் இருக்கும். 21ம் நூற்றாண்டிலும் அடிப்படை வசதியின்றி அல்லலுறும் இந்தியர்கள் எத்தனை எத்தனை. வளரும் இந்தியாவில், வாடும் இந்தியர்கள் எத்தனை எத்தனை! ஒளிரும் இந்தியாவில், உருகும் இந்தியர்கள் எத்தனை எத்தனை! என்று விளையும் எங்கள் புண்ணிய பூமி என ஏக்கத்தோடு காத்திருக்கும் விவசாயிகள் எத்தனை எத்தனை! பெண்களாய் பிறந்ததாலே பல்வேறு பெண் கொடுமைகளை அனுபவிக்கும் பெண்கள் எத்தனை!
நோபல் பரிசு பெற்ற பெருமகனார் பொருளாதார மேதை அமர்த்தியா சென் அவர்களின் ஆய்வின் படி 600 மில்லியன் இந்தியர்கள் மலம் கழிக்க இடமின்றி திறந்த வெளியில் தினமும் அவதிப் பட்டுக் கொண்டிருக்கின்றனர். 
அமர்த்தியா சென் அவர்கள் தான் எழுதிய "An Uncertain Glory " என்ற நூலில், மிக முக்கியமாக எழுப்பும் கேள்வி, "600 மில்லியன் இந்தியர்கள் மலம் கழிக்கச் செல்வது எங்கே?" 'இந்தியா ஒளிர்கிறது' என அறிவிக்கும் அரசியல்வாதிகள் அமர்த்தியா சென் அவர்களின் கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் திகைப்பது அனைவரும் அறிந்ததே. திறந்த வெளியில் மலம் கழிப்பதால் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு அன்றாடம் மக்கள் அவதிப் படுவது அறிந்தும் அறியாமல் இருக்கும் அரசியல்வாதிகள் எப்படி மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வார்கள் என்பது பொ¢ய கேள்விக்குறியே. 
திறந்தவெளியில் மலம் கழிப்பதால் பரவும் நீர்வினை நோய்களால் இந்தியாவில் தினமும் 1,000 குழந்தைகள் செத்து மடிகின்றனர் என்கிறது புள்ளிவிவரம். இவ்வாறெல்லாம் அடிப்படை வசதியே இல்லாது மக்கள் அல்லலுரும் வேளையில் அவர்களுக்கு அடிப்படைத் தேவை, "கணிப்பொறியா...இல்லை ...கழிப்பறையா..?" 
600 மில்லியன் இந்தியர்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லை. என்ன கேவலம் இது? இந்த கேவலம் புரிய வேண்டியவர்களுக்கு புரியவில்லையே. அறிய வேண்டியவர்கள் அறிந்தும் அறியாமலே உள்ளனரே. இலவசம் என்ற பெயரில் ஒரு ஏமாற்றம் அல்லவா அரங்கேறிக்கொண்டிருக்கிறது. இலவசமாய் 'கணிப்பொறி' கொடுக்கும் அரசு, காசுக்கு அல்லவா கட்டண 'கழிப்பறை' வசதி கொடுக்கிறது. கழிப்பறை வசதியின்றி காட்டிலும், மேட்டிலும், இருட்டிலும், நடு ரோட்டிலும் கழிப்பிடம் தேடி அலையும் இந்நாட்டு ஏழைகள் கழிப்பறை காண்பது எப்போது? கணிப்பொறி கொடுத்துவிட்டு, மின்சாரத்தை துண்டித்துவிட்டு, எம்மை கவிழ்த்து விளையாடியது போதும் அரசே! எப்போது நீ அடிப்படை வசதியான கழிப்பறை கொடுக்கப் போகிறாய்? தடுமாறும் உறவுகளே, விழித்தெழ வேண்டிய தருணம் இதுவே. நமக்கு கலர் டி. வி. யும் வேண்டாம், கணிப்பொறியும் வேண்டாம். முதலில் அடிப்படை வசதியான கழிப்பறையைக் கொடுக்கட்டும் அரசு. மக்களின் அடிப்படை வசதிகளை நிவர்த்தி செய்ய வேண்டிய அரசு செய்யத் தவறும் போதெல்லாம், நாம் அனைவரும் சொல்ல வேண்டும், "சீச்சீ" அடிப்படை வசதியை வழங்காத அரசு ஓர் அரசா' என்று.

Life...!



Life IS a BLESSING when lived in its 

fullness

With Joy, Sharing and Caring


Life IS a CURSE when lived in vain


With Sadness, Selfishness, and Constant 


grudging 

Its up to each one to make it a BLESSING

 or a CURSE.

ln Solitude


Being alone with the alone in 

Solitude

Will make us delighted in 


Gratitude

Silent search in solitude 


Grateful reach in gratitude


Will ever change our attitude!


This will decide our altitude...!

எழுவோம்.... மீண்டும்.....!

கடற்கரை ஓரத்திலே
எம் ...
தியாகத் தலைவியே
உன்னைக் கண்டதும் 
கலங்குகின்றன கண்கள்!
உன்னை
உயிரோடு பிடித்து
உடலினை வதைத்து
கைகளைக் கட்டி
கதறக் கதற 
கொடுமை செய்ததே
கயவர்கள் கூட்டம்!
உம் அழகிய உருவை 
அழுகிய நிலையில் 
கண்டதும் கலங்குகின்றன
எம் கண்கள்! 
வீரப் பெண்ணே உன்னை
கொன்றுவிட்டனரே
கோழைகள்....
கோழைத்தனமாய்!
வாழப் பிறந்தாய் நீ
ஆம்...
தனித்தமிழ் ஈழத்தில்
வாழப்பிறந்தாய் நீ!
ஆளப்பிறந்தாய் நீ
ஆம்...
தனித்தமிழ் ஈழத்தை
ஆளப்பிறந்தாய் நீ!
ஆனால்....
எம் புரட்சிப் புதல்வியே
உன்னை அழித்து விட்டனரே
அந்த சிங்கள வெறியர்கள்!
உன் நிலை கண்டு
எம்மிலே உள்ள 
இரத்தநாளங்கள் எல்லாம்
கொதிக்கின்றன ஒன்றாய்...!
இழந்த உன்னை 
மீண்டும் பெறுவோம்! 
விழுந்த மண்ணில் 
மீண்டும் எழுவோம்!
என்ற...
உயரிய நம்பிக்கையோடு.....!

Monday 4 November 2013

இணைபிரியா...எம் அக்கா....இசைப்பிரியாவே....!

புரட்சிப் புதல்வியே....
இணையத்தில்
உம் துயரம்
படிக்கின்ற போது
இதயத்தில்
உம் தியாகம்
துடிக்கின்றதே!
மாணவர்
என்ற மாண்பிலே
படிக்கின்ற சமுதாயம்
உனக்காக நாளும்
துடிக்கின்ற போது!
அரசியல்
என்ற பெயரிலே
நடிக்கின்ற சமுதாயம்
தனக்காக நாளும்
நடிக்கின்றதே!
இணைபிரியா
எம் அக்கா
இசைப்பிரியாவே...
உன் இழப்பை எண்ணி
தவிக்கிறது நாளும்
தன்மானமுள்ள
தமிழ் சமூகம்!
தமிழுக்காய்...
எம் ஈழத்தமிழருக்காய்
தன்னுயிரைக்  கொடுத்தாயே
எம் தியாகத்தலைவியே...!
அன்று உம்மை
உருக்குலைத்து
உயிரெடுத்தனர்
உயிர் உயர்வு
தெரியாத அரக்கர்கள்!
ஆனால்...
இன்று எம்மை
அழிக்க நினைத்தாலும்
அழிக்க இயலாது
ஒழிக்க நினைத்தாலும்
ஒழிக்க இயலாது!
ஏனெனில்
இணைபிரியா
எம் அக்கா
இசைப்பிரியாவே!
இன்று யாம்
உம்மை எம் இதயத்தில்
அணையாது சுமக்கிறோம்!
தமிழ் ஈழமே
தனித்தீர்வு என
தணியாது நடக்கிறோம்!
புரட்சிப் புதல்வியே
நீர் ஏற்றிய புரட்சித்தீ
அணையாது காப்போம்
அதற்காக யாம்
அயராது உழைப்போம்..!

தீபாவளி.....



தீபாவளி......தீராவலி.....


ஒவ்வொரு வருடமும்
வந்து செல்லும் 
வாடிக்கைத் திருநாள்!
வாடிக்கை நாளில்
வேடிக்கை பார்க்கும் 
கேடிக்கை வேண்டாம் இன்று!
தீபத்தின் திருவிழா அன்று
சிறிது சிந்திப்போம் நன்று!
ஊரெல்லாம் ஒரே வெடிச்சத்தம்
காணும் இடமெல்லாம்
காகிதக் குப்பைகள்!
கேட்கும் ஒலியெல்லாம்
பட்டாசு சப்தங்கள்!
சுவாசிக்கும் காற்றெல்லாம்
பட்டாசு மாசுக்கள்!
முகநூலின் அகமெல்லாம்
திருவிழா வாழ்த்துக்கள்!
பலவற்றை பார்க்கின்ற நான் 
சிலவற்றை பார்த்திட மறந்தேனே....!
ஒளியில் கொண்டாடுகிறது ஒரு கூட்டம்...
வலியில் திண்டாடுகிறது ஒரு கூட்டம்...
"
திண்டாடும் வலிகள்தான் 
கொண்டாடும் ஒளிகளுக்கு காரணம்"
மறக்க நினைக்கிறதே மனித மனம்!
ஆம்....
குதூகல கொண்டாட்டத்திலே
குழந்தைகளின் திண்டாட்டத்தை
மறந்துவிடுகிறதே மனித இனம்....!
ஏனென்றால்....
இதுதான் மனித குணம்...!
பச்சிளம் பிஞ்சுகளின்
வலிகள் தானே....
பட்டாசு குச்சிகளில்
ஒளிகள் தந்தன...!
தீபத்தின் திருநாளிலே...
எல்லோரையும் 
ஒளியில் வாழ வழி செய்து
ஒளியில்லா கூரையிலே
வேறு வழியில்லாமல்
இருளில் வாடி
பட்டாசு செய்யும்
பச்சிளம் பிஞ்சுகள்
ஒளியைக் காண்பது 
எப்போது...யாரால்...?
தீபத்தை ஏற்றும் போது
கொஞ்சம்...
சிந்திக்கலாமே உறவுகளே...?
இத்தீபாவளி தீர்க்குமா
இளசுகளின் தீராவலியை....?


*************

Sunday 27 October 2013

உன்மதி தாரும் ஆண்டவனே...



எதை செய்ய நினைக்கின்றேனோ...

அதை செய்ய மறக்கிறேன்...!

எதை செய்ய வெறுக்கின்றேனோ...

அதை செய்ய பறக்கிறேன்...!

இது தான் மனித நியதியா இறைவா...

என் உள்மனம் நினைப்பதை

முனைப்போடு நிறைவேற்ற

முன்மதி தாரும் என் மன்னவனே...!

என் முன்மதி நன்மதியாய் அமைந்திட

உன்மதி தாரும் ஆண்டவனே...!


*******

மாணவ சக்தியே...மகத்தான சக்தி...

மாணவ சக்தியே...மகத்தான சக்தி...



என் இனம் அழிய...

இந்தியா மட்டும் அல்ல 
தமிழ் நாட்டில் தமிழருக்காய்
என்று சொல்லிக் கொண்டு
தன்னலம் மட்டுமே கருதி 
தமிழர்களின் குருதி குடித்து
கொளுத்துக்கொண்டிருக்கும்
நம் அரசியல் வாதிகளின் அநியாய சதியும்தான் இது....
எழுந்திடு என் தமிழ் இனமே....
காசுக்காக கட்சியிலே
காலத்தை கடத்தியது போதும் என் தமிழ் உறவுகளே...
நம் தமிழ் இன விடுதலைக்காகவது
கட்சியைக் கடந்து
தமிழர்களாய் ஒன்று சேர்வது எப்போது...?
மாணவ சமுதாயமே மயங்கி விடாதே
கட்சியாளர்களின் வெற்றுப்பேச்சில்...
மயங்கினால் போதும்
மாணவ சக்தியை கட்சிக்காக பயன்படுத்தி
ஆட்சியைப் பிடித்துக் கொண்டு
பின் நம்மவரை சிறையினில் அடைக்கவும் தயங்காது....
நம் இனம் செழிக்க மாணவ சக்தியே மகத்தான சக்தி.....
தொடர்ந்து குரல் கொடுப்போம்...
உயிர் இருக்கும் வரை உணர்ந்து குரல் கொடுப்போம்....
*******

நினைக்க...உன்னை நினைக்க...




கலைந்த கனவுகள்...


மறைந்த நினைவுகள்...


உதிர்ந்த உறவுகள்...


உடைந்த சிறகுகள்...


கடந்த நிகழ்வுகள்...


நடந்த பாதைகள்...

எல்லாம் என்னிலே

இல்லையெனினும்

இறைவா...

உன்னை நினைக்கையிலே....

கலைந்த கனவுகள்

நினைவுக்கு வருகின்றன !

உதிர்ந்த உறவுகள்

உயிர் பெறுகின்றன !

உடைந்த சிறகுகள்

ஒட்டிக் கொள்கின்றன !

கடந்த நிகழ்வுகள்

கண்முன் வருகின்றன !

நடந்த பாதைகள்

நன்றாய்த் தெரிகின்றன !

நினைக்க...

உன்னை மட்டுமே நினைக்க

ஓர் வரம் தா இறைவா...!

*******